புதுச்சேரியில் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி: புதுச்சேரியில் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை கதிர்காமம் தில்லையாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் காரணமாக தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று முதல் துவங்குகிறது.

அதன்படி புதுச்சேரியில் மேற்கண்ட வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. கதிர்காமம் அரசு தில்லையாடி வள்ளியம்மை உயர்நிலைப்பள்ளியில் இப்பணியினை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அரசு மருத்துவ செவிலியர் குழுவினர் 15 வயதுக்குட்பட்ட மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசிகளை போட்டனர். ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. 2007ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதாவது 15 வயது பூர்த்தியாகி 10, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 பயிலும் மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. இதற்காக மொத்தம் 83 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி புதுச்சேரி வந்துள்ளது.

Related Stories: