சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை; அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜவஹர் நகர் 70 அடி சாலை பகுதியில்  கொடும் மழையில், மழைநீர் வடிகால் பணியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, ஜி.கே.எம். காலனி, மாரியம்மன் கோயில் குட்டையை பார்வையிட்டனர். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரி அமைய இருக்கும் இடத்தையும், கொளத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்தும் கொள்ளளவை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது: சென்னையில் பெய்த திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பெரும்பாலான இடங்களில் மழைநீரை  வெளியேற்றி சரிசெய்துள்ளோம். முழு பணியும் விரைவில் முடிந்துவிடும். திருச்சியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை வந்த முதல்வர், இரவிலும் வெள்ள மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த பகுதிகளில் குளங்கள், நீர்நிலைகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றை விரைவில் அகற்ற மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளோம். அடுத்த மழைக்குள் பணிகளை முடிக்க கலெக்டரிடம் அறிவுறுத்தியுள்ளோம். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் எந்த பணியும் நடக்கவில்லை. சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: