தலைமை துணை இயக்குநர் பேட்டி ஆதாரில் திருத்தம் செய்ய ரூ.50 மட்டுமே கட்டணம் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை

திண்டுக்கல்: ஆதாரில் முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்ய கட்டணமாக ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதார் தலைமை துணை இயக்குநர் கோபாலன் தெரிவித்தார். திண்டுக்கல்லுக்கு நேற்று வந்திருந்த ஆதார் தலைமை துணை இயக்குநர் கோபாலன் அளித்த பேட்டி: பொதுமக்களிடமிருந்து வங்கிகள் மற்றும் டெலிபோன் நிறுவனங்கள் மட்டுமே ஆதார் அட்டையை பெற முடியும். வேறு தனியார் நிறுவனங்கள் யாரும் ஆதார் விபரங்கள் கேட்க உரிமை கிடையாது. மீறி கேட்டால் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

ஆதாரில் முகவரி, செல்போன் எண் போன்றவற்றில் திருத்தம் செய்ய ஆதார் மையங்கள் ரூ.50 மட்டுமே பொதுமக்களிடம் கட்டணமாக  வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் 99 சதவீதம் பேர் ஆதார் எடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் 1,500 போஸ்ட்மேன்களுக்கு ஆதார் திருத்தம் செய்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவர்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்து கொள்ளலாம். அடுத்தாண்டில் 2 ஆயிரம் போஸ்ட்மேன்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணி சில மாநிலங்களில் சோதனை அடிப்படையில் நடந்து வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆதார் மையங்களில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு புதிதாக ஆதார் எடுப்பது, திருத்தம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி காக்க வைக்காமல் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: