தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்

சென்னை: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக சிவராஜா ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புத்தொழில்களுக்கு, உந்துசக்தியாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான துடிப்பான தொடக்க சூழலை கட்டமைப்பதற்கும் புத்தாக்கத்தால் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் எனும் TANSIM வழிவகுக்கிறது.புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தில், திறமையும் அனுபவமும் கொண்ட ஒரு தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க தமிழ்நாடு அரசால் தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில், சிவராஜா ராமநாதன் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்களில் ஒரு உன்னதமான புத்தொழில் சூழலையும், புத்தொழில் நிறுவனங்கள் மேலும் மேம்பட புத்தொழில் முனைவோர்களுக்கான தளத்தை நிர்வகிக்கும் சிவராஜா ராமநாதன் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக  தொழில் முனைவில் 25 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் பெற்றவர். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக ஜனவரி 2022 முதல் வாரத்தில் பதவி ஏற்க இருக்கும் சிவராஜா ராமநாதன் தலைமையின் கீழ் தமிழ்நாடு அரசின் TANSIM இயக்கம் மூலமாக புதிய தொழில்களுக்கான சூழல் உருவாக்கத்தில் தமிழகம் பன்மடங்கு உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: