உடல் மீது அக்கறை செலுத்தினாலே போதும்!

நன்றி குங்குமம் டாக்டர்

எந்த ஆர்ப்பாட்டமும், சர்ச்சையும் இன்றி டாப்ஸி அமைதியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். அது வலுவான முன்னேற்றமாகவும் இருக்கிறது என்று சினிமா தெரிந்தவர்கள் கணிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கும் டாப்ஸி, ‘பிங்க்’ மூலம் பாலிவுட் குயின் கங்கணா ரணாவத்துடனும், கோலிவுட்டில் ‘கேம் ஓவர்’ மூலம் நயன்தாராவுடனும் சத்தமில்லாமல் போட்டி போட்டுக்
கொண்டிருக்கிறார். கிளாமருக்குத் தயங்காத நடிகை, அபாரமான நடிப்புத்திறன் கொண்டவர் என்பதுடன் ஃபிட்னஸ் விஷயத்தில் டாப்ஸி பயங்கர ஷார்ப்.

டாப்ஸியின் ஃபிட்னஸ் டைரியில் ஒரு நாள் என்னவெல்லாம் இருக்கும்?!

காலை எழுந்ததும் ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீருடன் பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை தவறாமல் எடுத்துக் கொள்கிறார். இது சருமப் பாதுகாப்புக்கும், உடல் நச்சுத்தன்மையை நீக்கவும் உதவுமாம்.

அதைத் தொடர்ந்து உடலின் அமிலத்தன்மையைப் போக்க ஒரு கப் க்ரீன் டீ, வெள்ளரிக்காய் அல்லது செலரி ஜூஸ் குடிக்கிறார். பசி எடுக்கும்போதெல்லாம் உணவை சிறு சிறு பகுதிகளாக பிரித்து சாப்பிட வேண்டும் என்பதில் நம்பிக்கையுடையவர். உணவு இடைவேளைகளில், புரோட்டீன் ஷேக்குகள் எடுத்துக் கொள்வதை விரும்ப மாட்டார். அதற்கு பதில், பசியுடன் இருக்கும்போதெல்லாம் ஓட் மீல் பார்கள் அல்லது ட்ரை ஃப்ரூட் பார்கள் எடுத்துக் கொள்வார்.

8 மணிக்கு மேல் இரவு உணவை கண்டிப்பாக தவிர்த்துவிடுவார். 8 மணிக்குமேல் என்றால், எளிதில் செரிக்கக்கூடிய வெறும் சூப் மட்டுமே அருந்துவார். இரவு நேரங்களில் ஒருவருடைய வளர்சிதை மாற்றம் மிகக் குறைவாக இருக்கும் என்பதால், லேட்டாக உணவு உட்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அதேபோல் குளூட்டன் இல்லாத கம்பு அல்லது அரிசி மாவினால் செய்த உணவுகளை உண்கிறார். வாரத்திற்கு ஒருமுறை விரும்பிய உணவை சாப்பிடுவார். அதுவும் அளவோடுதான்.

உடற்பயிற்சிக்கு முன் இளநீர் மட்டுமே அருந்துவார். சப்ளிமென்ட் உணவுகளையோ, புரோட்டீன் ஷேக்குகளையோ கண்டிப்பாக எடுத்துக் கொள்வதில்லை. உடற்பயிற்சியை வாக்கிங், அவுட்டோர் கேம் என மிதமான பயிற்சிகளாக மேற்கொள்வது வழக்கம். டாப்ஸிக்கு ஸ்குவாஷ் விளையாடுவது கொள்ளைப் பிரியம்.

எப்போதும் டாப்ஸி தன் நண்பர்களுக்குச் சொல்லும் ஃபிட்னஸ் அறிவுரை இது...

‘ஒருவர் தன்னுடைய உடல்வாகைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவருடன் ஒப்பிட்டுக் குழப்பமடையக் கூடாது. அதற்கு பதில் உடலின் மீது அக்கறை செலுத்தினாலே போதும். உடலின் அனைத்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவக்கூடிய, நச்சுத்தன்மை வெளியேற்ற நடவடிக்கைகளை அடிக்கடி செய்வது அவசியம். உடலை வருத்தும் பட்டினி வேண்டாம். அதற்கு பதிலாக ஒருவர் தன் உடலுக்கு உண்மையில் என்ன தேவை? என்பதை உணா்ந்து அதற்கேற்ற நல்ல உணவை அளிக்க வேண்டும்!’

- என்.ஹரிஹரன்

Tags :
× RELATED இதயம் காக்கும் உணவுகள்!