புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஏற்காடு விடுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த தடை: போலீசார் தீவிர கண்காணிப்பு

சேலம்: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஏற்காட்டில் விடுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஆங்கில புத்தாண்டு நாளை மறுதினம் பிறக்கிறது. இதையொட்டி 31ம் தேதி இரவு உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி 2022ம் ஆண்டை வரவேற்க தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் விழா களை கட்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோர பிடியினால் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை. தற்போது கொரோனாவின் புதிய உருவமான ஒமிக்ரான் பரவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை செய்து வருகிறது. இதற்கு முன்னோட்டமாக ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் ஏற்காட்டிற்கு பல்வேறு  மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். ஏற்காட்டில் 130 விடுதிகள் இருக்கிறது. இங்கு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் போலீசாரும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொது இடங்களில் மக்கள் கூடி கேக் வெட்டி கொண்டாடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் மாவட்டம் முழுவதும் எந்தவிதமான நிகழ்ச்சிகள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘தற்போது ஒமிக்ரான் பரவி வருகிறது. இந்சூழ்நிலையில் விடுதிகளில் கொண்டாட்டம் நடத்தினால் நோய் அதிகமாக பரவ கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் வெளிஇடங்களில் புத்தாண்டை கொண்டாடுவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்,’’ என்றனர்.

Related Stories: