இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?: ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: இந்திய மீனவர்களை விடுவிக்க எடுத்த நடவடிக்கை குறித்து, ஒன்றிய அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமேஸ்வரம், புதுக்ேகாட்டை, தங்கச்சிமடம், மண்டபம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவது, படகுகளை சேதப்படுத்துவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

குஜராத்தை சேர்ந்த 5 மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் சுடப்பட்டதில் ஒருவர் இறந்தார். இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட ஒன்றிய அரசு, பாகிஸ்தான் தூதரை அழைத்து கடுமையாக எச்சரித்தது. ஆனால், நமது மீனவர்கள் 68 பேரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், தேவையான சட்ட உதவிகளை செய்யுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘3 நாட்களில் 68 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு இருவேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, மீனவர்களை பாதுகாப்பாக மீட்கவும், தேவையான சட்ட உதவிகளை செய்ய வேண்டுமென்றும் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர், செயலாளரை தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார். மீனவர்களையும், பறிமுதல் செய்த படகுகளையும் மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசின் சார்பில் ேமற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுடன் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது’’ என்றார்.

ஒன்றிய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, ‘‘இந்திய மீனவர்களின் கைது குறித்து இலங்கை அரசுடன் தொடர்பு கொள்ளப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் விபரத்தை தெரிவிக்க போதுமான அவகாசம் வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஜனவரி மாதத்தில் மீனவர்கள் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து பேசிடும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும்’’ என்றனர். பின்னர், மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை விரைவாக மீட்கவும், தேவையான சட்ட உதவிகளை செய்யவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசின் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: