தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் சந்தேகம்; உ.பி தேர்தலை ஒத்திவைக்க பாஜக சதி?.. சட்டீஸ்கர் முதல்வர் பகீர் குற்றச்சாட்டு

ராய்ப்பூர்: உத்தரபிரதேச தேர்தலை ஒத்திவைக்க பாஜக சதி செய்வதாக சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சட்டீஸ்கர் மாநில முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல், ராய்ப்பூரில் நிருபர்களிடம் கூறுகையில், ‘உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் ஒன்றிய, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுகிறது.

உத்தரபிரதேசத்தில் தேர்தலை ஒத்திவைக்க பாஜக சதி செய்கிறதா? என்ற சந்தேகமும் உள்ளது. தேர்தல் ஆணையம் என்ன மாதிரியான முடிவு எடுக்கப் போகிறது என்பது எனக்கு தெரியாது. கடந்த முறை மேற்குவங்கத்தில் தேர்தல் நடந்த போது மக்கள் ஒருபக்கம் இறந்து கொண்டிருந்தனர்; மறுபக்கம் தொடர்ச்சி பல்வேறு கட்டங்களாக தேர்தலை நடத்தினர். தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது; ஆனால் அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒமிக்ரான் வைரஸ் இன்று வேகமாக பரவி வருவதால், யோகிகள் (பாஜக தலைவர்கள்) மிகவும் பதட்டமாக உள்ளனர்.

அதனால், அவர்கள் தேர்தலை ஒத்திவைக்க சதி செய்யகின்றனாரா? என்ற கேள்வி உள்ளது. அனைவரது கண்களும் தேர்தல் ஆணையத்தின் மீதுதான் உள்ளது. ஏனெனில் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில், தலைமை தேர்தல் ஆணையருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் அந்த கூட்டத்தில் முறைசாரா முறையில் கலந்து கொண்டனர். அதனால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது’ என்றார்.

Related Stories: