ராமநாதபுரம்: தமிழகம் முழுவதும் 5,500 விசைப்படகுகள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. தேசிய அளவிலான மீன்பிடியில் கடந்தாண்டு குஜராத் முதலிடத்தில் இருந்தது. ஒன்றிய கடல் மீன் ஆராய்ச்சி கூட கணக்கெடுப்பின்படி, நடப்பாண்டு மீன் பிடிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழக கடற்கரையின் நீளம் 1,071 கி.மீ. இதில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையின் நீளம் 237 கி.மீ. மாவட்டத்தில் 1,600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5,700க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. கடந்த 2018ல் தமிழகத்தில் 7.18 லட்சம் டன், 2019ல் 7.75 லட்சம் டன் மீன்கள் பிடிபட்டன. 2020-21ல் 10 லட்சம் டன் மீன்கள் பிடித்து குஜராத் மாநிலத்தை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 2.64 லட்சம் டன் மீன்கள் பிடித்து மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது.