திருவொற்றியூரில் பழைய குடியிருப்பு இடிந்த சம்பவம் பொதுமக்களை காப்பாற்றியவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கடந்த 1993ம் ஆண்டு கட்டப்பட்ட 3 மாடி கொண்ட பழைய குடியிருப்பு, நேற்று முன்தினம் காலை திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த 24 வீடுகளும் தரைமட்டமாயின. அதிர்ஷ்டவசமாக அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். முன்னதாக, அந்த குடியிருப்பு கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதை அறிந்த தனியரசு என்பவர், உடனடியாக அங்குள்ள மக்களை வெளியேற்றினார். பின்னர் இதுபற்றி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு கட்டிடத்தில் விரிசல் அதிகமாவதை கண்டறிந்து, அந்த குடியிருப்புகளில் வசித்த மக்களை உடனடியாக பாதுகாப்பாக வெளியேறிட இவர் எச்சரிக்கை செய்ததால் இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவந்தது. இதையடுத்து, தனியரசுவை முதல்வர் நேற்று தலைமை செயலகத்தில் நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினார். இந்த நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: