சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: விளையாட்டுத்துறை  மேம்பாட்டுதிட்டப் பணிகள் சார்ந்த ஆய்வு கூட்டம் சென்னை நேரு விளையாட்டு அரங்கம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதில் சுற்றுச்சூழல், காலநிலைமாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஆர்.ஆனந்த குமார் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளையாட்டில் சர்வதேச அளவில்  சாதனை படைக்க வேண்டும் என்ற ஒவ்வொரு வீரர்களின் கனவை நனவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக ரூ.226  கோடி நிதி ஒதுக்கியுள்ளார். தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை மாணவர்களும், இளைஞர்களும் முறையான  பயிற்சி பெற்றிட அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் மினி விளையாட்டரங்கம் கட்ட  உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் விளையாட்டு அரங்கங்கள் அமைத்திட இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்.   மேலும்  சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி ஆகிய இடங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கான பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணியாளர்கள் கோரிக்கைகள் நிலுவையில் இருந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து  தீர்வு காண வேண்டும். விளையாட்டு வீரர்கள் அனைவரும்  நம் பிள்ளைகள், நம் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்ப்பவர்கள் என்ற உணர்வோடு  அர்ப்பணிப்புடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: