முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் கடைகோடி மக்களிடம் செல்ல பணியாற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்

சென்னை: செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மண்டல இணை இயக்குநர்களுக்கான ஆய்வு மற்றும் அறிவிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்  வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை  இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள்  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது: முதலமைச்சர் ஒப்புதலோடு அரசின் திட்டங்கள் யாவும் மக்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லும் பணிகளை, செய்தித் துறையின் சார்பில் செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேலும் செம்மைப்படுத்துகின்ற வகையில் செய்தித்துறையின் புதிய முயற்சியாக 6 மண்டல இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை ஆய்வு செய்தல்,  முதலமைச்சரின் விழாக்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாப் பணிகளை ஒருங்கிணைத்தல், துறை வாரியான செய்தியாளர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்கள் மற்றும் நினைவகங்களில் மக்கள் பயன்பாட்டினை உறுதி செய்தல் மற்றும் மாவட்டங்களில் கள விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிநவீன எல்.ஈ.டி வாகனங்களின் செயல்பாட்டினை கண்காணித்தல், தமிழரசு இதழ் சந்தாதாரர்களை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுதல் பணிகளை செய்வார்கள். குறிப்பாக முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ள மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கடைக்கோடி மக்களிடமும் சென்றடைந்திட அர்ப்பணிப்புடன் அனைவரும் பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

Related Stories: