பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மே மாதம் நடக்கும்: பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக கட்டிடத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான 5வது ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

அதற்கு பிறகு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அளித்த தரவுகளின்படி, முதல்கட்டமாக தமிழகத்தில்  1600 பள்ளிகள் இப்போது இடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. அவற்றை முழுமையாக இடிக்க வேண்டும் என்று கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளோம். பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வுக்காக 14417 எண்ணை எல்லாம் பள்ளிகளிலும் எழுதி வைக்க வேண்டும். புகார் பெட்டியில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை காட்டிலும் பள்ளிகள் எப்போது திறக்கப் போகிறீர்கள், ஒமிக்ரான் தொடர்பாக மூடப்படுமா, தேர்வுகள் எப்போது நடக்கும் என்பன போன்ற கேள்விகள் தான் அதிக அளவில் கேட்டு புகார் பெட்டியில் வந்துள்ளன.

பொதுத் தேர்வுக்கான பணிகள் இந்த மாத இறுதியில் முடிந்து விடும். ஜனவரி 3 வது வாரத்தில் திருப்பத் தேர்வுகள் தொடங்கும். ஏற்கனவே அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பாடத்திட்டங்களை முடிக்க ஏப்ரல் இறுதி வாரம் ஆகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் மே மாதம் பொதுத் தேர்வு கண்டிப்பாக நடக்கும். பள்ளி கட்டிடங்கள் இடிகின்ற விவகாரத்தில், அதை கட்டிய ஒப்பந்ததாரர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிய அல்லது பழைய கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை முழுமையாக சோதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

இனிவரும் காலத்தில் இதுபோன்று இல்லாமல் கண்காணிப்பில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். மிகவும் பழமையான கட்டிடங்களில் பழுது இருந்தால் அவற்றை சரி செய்ய என்ன செய்யவும், இல்லை என்றால் இடிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இடிக்கப்படும்போது, அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் இணைக்கவும், அல்லது வாடகை கட்டிடத்தில் பள்ளிகள் இயங்கவும் ஏற்பாடு செய்யப்படும். அதற்காக முதல்வரிடம் நிதி கேட்டுள்ளோம். அதற்கான நிதி முதல்வர் வழங்கினால், இடித்த கட்டிடங்கள் கட்டப்படும்.

ஒமிக்ரான் தொற்று தொடர்பாக அரசு வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் நடத்தப்படும். இதுவரை அரசிடம் இருந்து உத்தரவு ஏதும் வரவில்லை.  விடுமுறை நாளில் பள்ளிகள் நடத்தினால் , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு பெற்றவர்கள் தவிர, முறைகேட்டில் இடம் பெற்ற சிலர் பணியாற்றுவதாக தகவல் வந்துள்ளது. தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து நீதி மன்றம் தெரிவித்துள்ள கருத்தை ஒட்டியே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* விரைவில் பணியிட மாறுதல் கவுன்சலிங்

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மேலும் கூறியதாவது, ‘‘ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங் தொடர்பான அறிவிப்பு இரண்டு நாளில் வரும். அதைத் தொடர்ந்து 2 வாரத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கும், பின்னர் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளுக்கும்  கவுன்சலிங் நடக்கும். பணி நிரவல் முடிந்த பிறகு நமக்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவை என்பதை பொறுத்து ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும். இன்னும் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். மாணவர்கள் விகிசாரத்தின் அடிப்படையில், நியமனம் செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: