கோயில் நிலங்களை கண்டறிந்து மீட்பதற்கு வருவாய், உள்துறை, அறநிலையத்துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில் நிலத்தை கண்டறிந்து மீட்பதற்கு தமிழக அரசின் வருவாய் துறை, அறநிலையத் துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,’சென்னை போரூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள அருள்மிகு கோதண்டராமர் கோயிலுக்கு சொந்தமாக 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. அவற்றை போலி ஆவணங்களை கொண்டு தங்கள் பெயருக்கு மாற்றும் வகையில் நில அபகரிப்பாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆக்கிரமிப்பை தடுக்கக் கோரி நான் அளித்த புகாரில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில் வருவாய் துறை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

நில உரிமையாளர் என உரிமை கோருவோரின் ஆவணங்களும் சரிபார்க்கப்படுகிறது. இந்த பணிகளை முடித்து கோயில் நிலங்களை மீட்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் கோரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி,’கோயில் நில ஆவணங்களை ஆராய்ந்து, கணக்கெடுத்து, மீட்பதற்கும், அபகரிப்பாளர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசின் வருவாய் துறை, அறநிலையத் துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

 அதன்படி நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோயில் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த உரிய அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை 6 வாரங்களில் கூட்ட வேண்டும். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நிலங்கள் மீட்பதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Related Stories: