நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கமுதி வழக்கறிஞர் சங்க தலைவர் தொழில் செய்ய தடை: தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் நடவடிக்கை

சென்னை: கமுதி வழக்கறிஞர் சங்க தலைவராக பதவி வகித்து வருபவர் முனியசாமி. இவர் கமுதி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வழக்கறிஞர் ராமநாதன் (பொறுப்பு) மாஜிஸ்திரேட்டிடம் புகார் கொடுத்தார். கமுதி போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் ராமநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் முனியசாமி மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைக்க உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடியும்வரை வழக்கறிஞர் முனியசாமி வழக்கறிஞராக தொழில்புரிய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அவர் அனைத்து நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் ஆஜராக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: