17ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி: அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் பங்கேற்பு

சென்னை: சுனாமி தாக்கத்தின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கம், காசிமேடு ஆகிய கடற்கரை பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு மீனவர்கள், அரசியல் கட்சியினர் நேற்று பூ தூவியும், பால் ஊற்றியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். உலகம் முழுவதும் 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரழிவு நடந்தது. இதில் தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் தங்களின் உடமைகளையும் பறிகொடுத்தனர். இந்த நிலையில் நேற்று 17வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தங்கள் உறவுகளை இழந்த பலரும் அந்தந்த கடற்கரை பகுதிக்கு சென்று உறவுகளை நினைத்து பூ தூவி, பால் தெளித்து அஞ்சலி செலுத்தினர்.

இதனால், நேற்று கடற்கரை பகுதிகள் சோகமயமாக காட்சியளித்தது. சுனாமி நிகழ்ந்த தினத்தை துக்க நாளாக அறிவித்து மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதலே கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவான்மியூர், திருவொற்றியூர், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ெசலுத்தினர்.திருவொற்றியூர் கே.வி.கே குப்பத்தில் திமுக சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் தலைமையில் நடந்தது. இதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்பி, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, நிர்வாகிகள் ராமநாதன், கே.பி.சொக்கலிங்கம், ஆதிகுருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழக பாஜ மீனவர் அணி சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு பாஜ மீனவர் அணி தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். இதில் பாஜ தலைவர் அண்ணாமலை பங்கேற்று கடற்கரை பகுதியில் சுனாமியின் போது உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி ெசலுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்ரவர்த்தி, பொது செயலாளர் கருநாகராஜன், நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பட்டினப்பாக்கம் கடற்கரையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சன் தலைமை தாங்கினார்.

இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன் ஆகியோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் பால் ஊற்றியும் தங்களது அஞ்சலியைச் செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அடையாறு துரை, மாநிலச் செயலாளர் கடல் தமிழ்வாணன், முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு, சுமதி அன்பரசு, ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் தலைமையில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அன்பழகனார், தமாகா தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான மீனவர் சங்க நிர்வாகிகள், மீனவ பெண்கள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் தலைமையில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பெண்கள் பட்டினத்தார் கோயில் தெருவில் இருந்து பால்குடம் ஏந்தி கடற்கரைக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் பொதுமக்களும் மணற்பரப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதே போல பல்வேறு அரசியல் கட்சியினர், மீனவ அமைப்பினர் சென்னை கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: