கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 6,483 பேருக்கு ரூ.207 கோடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 6,483 பேருக்கு ரூ.207 கோடி வழங்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி கொரோனா நோய்த் தொற்றால் இறந்த 375 முன்களப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.93.15 கோடி கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்கள் இரண்டு பேரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும் கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 6483 குழந்தைகளுக்கு (இரண்டு பெற்றோர்கள் (அ) ஒரு பெற்றோர் இழந்தவர்கள்) ரூ.207 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.50,000 கருணை தொகை வழங்கும் திட்டத்தினை சென்னையில் 10 நபர்களுக்கு கடந்த 8ம் தேதி தொடங்கியதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் கருணை தொகை வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதற்குரிய விண்ணப்பங்கள் அரசு இணையதளம் மூலம் பதிவேற்றும் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 42,671 விண்ணப்பங்கள் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதில் 20,934 பேர்களுக்கு ரூ.50,000 வீதம் ரூ.104.67 கோடி கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது. 18,863 பேர்களுக்கு பரிசீலனையில் உள்ளது. கொரோனாவினால் இறந்த நபர்களின் இறப்பு சான்றிதழ் இல்லாத வாரிசுதாருக்கு உதவும் பொருட்டு மாவட்ட அளவில் இறப்பின் காரணம் கண்டறிய குழு அமைக்கப்பட்டு அந்த குழுக்களின் மூலம் மக்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: