வேளாண் சட்டம் வாபஸ் விவகாரம்; மன்னிப்பு கேட்ட மோடியை தோமர் அவமதித்துவிட்டார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: வேளாண் சட்டம் விஷயத்தில் மன்னிப்பு கேட்ட மோடியை அமைச்சர் தோமர் அவமதித்துவிட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை வாபஸ்  பெறக்கோரி கடந்த ஓராண்டாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். அதனால்,  கடந்த

நவம்பர் 23ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்  தொடரில், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து  செய்யப்பட்டன.

இந்நிலையில் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாக்பூரில் நிருபர்களிடம் கூறுகையில், ‘வாபஸ் பெறப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகால பயணத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம்; ஆனால் சிலருக்கு அந்த சட்டங்கள் பிடிக்கவில்லை; ஒன்றிய அரசு ஒரு படி பின்வாங்கி உள்ளது. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்பதால் மீண்டும்  முன்னேறி செல்வோம்’ என்றார். வேளாண் அமைச்சரின் இந்த கருத்து, நேற்று அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் வேளாண் சட்டங்களை கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. அமைச்சரின் தோமரின் கருத்து குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடியை தோமர் அவமதித்துவிட்டார்; இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விவசாயத்திற்கு எதிரான மீண்டும் நடவடிக்கை எடுத்தால் மீண்டும் விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டம் நடக்கும். ‘ஈகோ’ ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் தோற்கடிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

நான் அப்படி சொல்லவில்லை!

ஒன்றிய அமைச்சர்  நரேந்திர சிங் தோமரின் பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வராது. வேளாண் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று நான் கூறவில்லை. வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததையும், அதனை திரும்பப் பெற்றதையும் கூறினேன். அதேபோல், விவசாயிகளின் நலனுக்காக ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பாடுபடும் என்றுதான் கூறினேன்’ என்று கூறினார்.

Related Stories: