நீட் தேர்வு குறித்து குடியரசு தலைவரிடம் முறையிட உள்ளோம்: டி.ஆர்.பாலு தகவல்

தாம்பரம்: சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்பியுமான டி.ஆர்.பாலு பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கணவரை இழந்த பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 68 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதன்பின்னர் டி.ஆர்.பாலு எம்பி பேசியதாவது; தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அது சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை நாங்கள் ஆளுநரிடம் வழங்கி 3 மாதம் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், குடியரசு தலைவர் பார்வைக்கும் அனுப்பவில்லை. இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை ஆளுநரிடம் நேரில் அனுப்பி, நீட் தேர்வு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் வலியுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

நாங்கள் அதிமுக, பாஜ தவிர அனைத்து கட்சி எம்பி, எம்எல்ஏக்களை டெல்லிக்கு அழைத்து, குடியரசு தலைவரை நேரில் சந்தித்து முறையிட இருக்கிறோம். நீட் தொடர்பாக சட்டமன்றத்தில் ஆதரவளித்த அதிமுக, பாஜ. என்ன காரணத்தினாலோ, தற்போது அனைத்து கட்சி கோரிக்கை மனுவில் கையெழுத்திடவில்லை. அவர்களுக்கு அழைப்பு விடுத்தும் எங்களோடு அவர்கள் டெல்லிக்கு வரவும் இல்லை. இவ்வாறு கூறினார். இதில் இ.கருணாநிதி எம்எல்ஏ, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: