ஒமிக்ரானில் இருந்து மீண்டு வர விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட வேண்டாம்: குடும்பத்துடன் வீட்டில் கொண்டாடுங்கள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை:சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் மற்றும் மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுன் 1,522 படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவில் 550 படுக்கைகளும் என மொத்தமாக 2,050 படுக்கைகள் செயல்பாட்டில் உள்ளது. தமிழகம் முழுவதும் 1¼ லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ஆக்சிஜன் வசதியை பொருத்தவரை 1,400 டன் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பை பொறுத்தவரை 34 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்னும் 40க்கும் மேற்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு நாம் விடுக்கிற வேண்டுகோள், ‘புத்தாண்டு மற்றும் பெங்கல்விழா கொண்டாட்டங்களில் கொரோனா விதிமுறைகளை மனதில் கொள்ள வேண்டும். ஒமிக்ரான் வேகமாக பரவக் கூடியது. எனவே ஒமிக்ரானில் இருந்து மீண்டு வருவதற்கு விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்கள் நட்சத்திர விடுதியில் இரவு நேரங்களில் நடத்தப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொண்டாட்டங்களை வீட்டில் இருந்து குடும்பத்துடன் கொண்டாடுவது தான் சரியான நிலையாக இருக்கும்.

விடுதிகளில் நடத்தப்படுகிற கொண்டாட்டங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று உரிமையாளர் மற்றும் பொதுமக்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம். அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வருபர்களில் 2 % பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 10 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதைப்போன்று 100 சதவீதம் பயணிகளும் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு 8-வது நாள் மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லை என்றால் மட்டுமே வெளிநடமாட்டத்தில் ஈடுபட வேண்டும். ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 5வது இடத்தில் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

* நோயாளிக்கு ஆபரேஷன் செய்த டாக்டர்களுக்கு கொரோனா

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள்,  செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து  3,038 பேருக்கு பரிசோதனை செய்ததில் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 39 பேருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு ஒமிக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 39 பேரின் மாதிரிகளும் ஒன்றிய  அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் சிகிச்சையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் நலமுடன் இருக்கின்றனர்.

Related Stories: