பூந்தமல்லி பகுதியில் 7 கடைகளில் 35 கிலோ குட்கா அதிரடி பறிமுதல்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் 7 கடைகளில் 35 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பூந்தமல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உணவுப் பொருட்களில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் ஒரு தனியார் ஓட்டலில் ஆய்வு செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த ஓட்டலில் இருந்து தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அப்பகுதி கடைகளுக்கு சிப்ஸ் ஏற்றி வந்த வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் உணவு பொருட்களுக்கு உரிமம் இருந்தது. ஆனால், அதை ஏற்றி வந்த வாகனத்துக்கு உணவு பாதுகாப்பு துறையில் இருந்து உரிமம் பெறவில்லை எனத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் திருநின்றவூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட 30 கிலோ குட்கா பறிமுதல் செய்து, 7 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு கடையை தற்காலிகமாக மூடியதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: