திட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் அதிகாரிகள் பரிசீலிப்பதில்லை: கோர்ட் உத்தரவை மதிக்காவிட்டால் சிறை தண்டனை: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவொற்றியூரை சேர்ந்த ஏ.எச்.எம்.டிரேடர்ஸ் நிறுவனம் மற்றும் முகமது அலி என்ற நிறுவனமும் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியதாக கூறி அந்த கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து 2 நிறுவனங்களும் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். மனுவில், மரம் மற்றும் பழைய மரப்பொருள்களை 17 ஆண்டுகளாக தாங்கல் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். உரிய அனுமதி பெற்றே இந்த வியாபாரத்தை செய்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 2005ல் தற்காலிகமாக ஒரு கொட்டகையை அமைத்து தொழிலை மேம்படுத்த திட்டமிட்டோம். அந்த கொட்டகையை அமைக்க திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர மாநகராட்சியிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளோம். எங்கள் விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, மனுதாரர்கள் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: திட்ட அனுமதி கேட்டு சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை மனுதாரர்கள் அணுகும்போது அதிகாரிகள் உரிய காலக்கட்டத்தில் அவர்களின் மனுக்களை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். பெரும்பாலும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இதுபோன்று திட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை உரிய காலத்தில் பரிசீலிப்பதில்லை. இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் அதிகாரிகள் அமல்படுத்தாமல் தங்களது கடமையை செய்ய தவறியுள்ளனர். இது நீதிமன்ற உத்தரவை மதிக்காததாகும். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது என்பது இரண்டாம் கட்டமாக இருக்க வேண்டுமே தவிர,  அவர்களை சிறையில் தள்ளுவதே முதல் கட்டமாக இருக்க வேண்டும்.

அதிகாரிகள் டிரோன் கேமரா போன்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து விதிமீறல் இருந்தால் மேற்கொண்டு கட்டிடங்களை கட்ட அனுமதி வழங்க கூடாது. மனுதாரர்களுக்கு உரிய வாய்ப்பளித்து அவர்களின் கட்டிடங்களை ஆய்வு செய்து அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும்.  இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மனுதாரர்கள் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் பட்டியலிடப்படாததால் இந்த வழக்கில் டிசம்பர் 10ம் தேதி வழங்கப்பட வேண்டிய தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. அந்த மனுக்கள் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தபோது வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையான முகாந்திரம் இல்லை என்று தெரியவந்துள்ளது.

இந்த நீதிமன்றத்திலிருந்து வழக்கை மாற்றுவதற்காகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. எனவே, மனுதாரர்கள் இருவருக்கும் சேர்த்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை இருவரும் மேட்டூர் அணை பகுதியில் உள்ள சுடரொளி சமூக சேவை அறக்கட்டளைக்கும், சென்னை திருவேற்காட்டில் உள்ள பசு மடம் அமைப்பிற்கும் 2 வாரங்களுக்குள் தரவேண்டும். இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: