திருச்சி காந்தி மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 2 பேர் படுகாயம்

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காந்தி மார்க்கெட்டின் உள்பகுதியில் 300க்கும் மேற்பட்ட கடைகளும், வெளிப்புறம் டீக்கடை, பழம், பேக்கரி கடைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தரை கடைகள் உள்ளன. எதிர்புறம் மீன்மார்க்கெட் உள்ளது. இந்நிலையில்  காந்திமார்க்கெட் வெளியே உஸ்மான் என்பவரது  டீக்கடையில், நேற்று காலை 6.30 மணியளவில் காஸ் அடுப்பில் பலகாரம் சுடும் பணியில் பரமசிவம் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அதிக பிரஷர் காரணமாக காஸ் அடுப்பு திடீரென வெடித்தது. இதில் அடுப்பு மற்றும் எண்ணெய் சட்டி தூக்கி வீசப்பட்டு தீப்பிடித்தது. கடை உரிமையாளர் உஸ்மான், டீ மாஸ்டர் ஆறுமுகம், பலார மாஸ்டர் பரமசிவம் மற்றும் ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். இந்த தீ, அருகிலிருந்த கடைகளுக்கும் பரவி புகைமண்டலமாக காட்சியளித்தது.

தகவலறிந்த காந்திமார்க்கெட் போலீசார், கன்டோன்மென்ட் தீயணைப்பு படை வீரர்கள் வந்து 1.30 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். 6 கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது. படுகாயம் அடைந்த பலகார மாஸ்டர் பரமசிவம், டீ  மாஸ்டர் ஆறுமுகம் ஆகியோர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: