சென்னைப் பல்கலை முறைகேடு ஆட்சி மன்றக்குழு விசாரணை: துணை வேந்தர் அறிவிப்பு

சென்னை: சென்னைப் பல்கலையின் தொலைதூரக் கல்வி படிப்பில் நடந்த முறைகேடு குறித்து பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு, சட்டப் ப டிப்பு குழு ஆகிய குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று சென்னைப் ப ல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார். சென்னைப் பல்கலைக கழகத்தின் தொலை தூரக் கல்வி நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு வாய்ப்புகளை பயன்படுத்தி 117 பேர் முறைகேடாக பட்டம் பெற முயற்சி செய்துள்ளனர். இந்த மோசடி தற்போது வெளியில் தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் ஏற்கெனவே அறிவித்து இருந்தார். இதற்கிடையே, சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நேற்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடந்தது. அதில் அந்த குழுவின் உறுப்பினர்கள், உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் மீது விவாதம் மற்றும் ஆலோசனை நடந்தது.

கூட்டத்துக்கு பிறகு துணை வேந்தர் கவுரி கூறியதாவது: சென்னைப்  பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்வி நிறுவனத்தின் மூலம் படிக்காமல் முறைகேடாக சான்றிதழ் பெறுவதற்கு முயற்சி செய்தவர்கள் குறித்து இந்த ஆட்சி மன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்த மோசடியில் 117 பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், சென்னைப் பல்கலைக் கழக சட்டக் கல்வி இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும். இந்த குழுவில் 3 முதல் 5 பேர் இடம் பெறுவார்கள். இவர்கள் முழுவதுமாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் தேர்வு நடந்த காரணத்தால் இந்த முறைகேடு நடந்துள்ளது. இனிமேல் நேரடியாக தேர்வு நடக்க இருப்பதால், இது போன்ற முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை. இது தவிர கல்வியின் செயல்பாடுகள் குறித்தும், ஆய்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு துணை வேந்தர் கவுரி தெரிவித்தார்.

Related Stories: