அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 551 கோயில்களில் திருப்பணிக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அக்கோயில்களின் பெயர்கள் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: பழமை வாய்ந்த கோயில்களில் அவற்றின் பழமை மாறாது புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டல அளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, கோயில் திருப்பணி மேற்கொள்ள இரண்டு வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட கோயில்களான சென்னை வடபழநி ஆண்டவர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், திண்டுக்கல் மாவட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை மாவட்டம் கூடழலகர் கோயில், காஞ்சிபுரம் குன்னவாக்கம் வேணுகோபாலசுவாமி கோயில், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காளகஸ்தீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா காசி விஸ்வநாதர் கோயில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில், சேலம் மாவட்டம் மேட்டூர் சென்றாயப் பெருமாள் கோயில், கோவை மாவட்டம் கோட்டை  கங்கமேஸ்வரர் கோயில், மயிலாடுதுறை, சீர்காழி  வீர நரசிம்மப்பெருமாள் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல், ரத்தின கீரீஸ்வரசுவாமி கோயில், தஞ்சாவூர் மாவட்டம் கோபுராபுரம்  சொர்ணபுரீஸ்வரர் கோயில், திருச்சி மாவட்டம் லால்குடி லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உட்பட 551 கோயில்களுக்கு ஆகம விதிபடி திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் முடிவுற்றவுடன் திருக்குடமுழுக்கு நடத்தப்படும். மேலும் பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிகள் குறித்த விவரங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் ‘திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்’ என்ற பகுதிக்கு சென்று மாவட்டம் வாரியாக கோயில்களை தேர்வு செய்து தெரிந்து கொள்ளலாம். இதனால் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என தெரிந்துக் கொள்ளலாம்.

Related Stories: