வருசநாடு அருகே வனப்பகுதியில் காட்டுயானை உலா-மலைக்கிராம மக்கள் அச்சம்

வருசநாடு : வருசநாடு அருகே, வனப்பகுதியில் காட்டுயானை உலா வருவதால் மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் மான், கரடி, புலி சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. மூல வைகை ஆறு இப்பகுதியில் இருந்து உருவாகிறது. இந்நிலையில், கடந்த சில மாதமாக வெள்ளிமலை அரசரடி பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதனடிப்படையில், மேகமலை மற்றும் வருசநாடு வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், மூல வைகை ஆறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் மற்றும் இரை தேடி கடந்த சில நாட்களாக வெள்ளிமலை அரசரடி பொம்மராஜபுரம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அரசரடி கிராமத்தில் தேனி வெள்ளிமலை சாலையில் நேற்று காட்டு யானை உலா வந்தது. இதனால், மலைக்கிராம மக்கள் அச்சமடைந்தனர். எனவே, யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: