8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி.!

தென்காசி: சுமார் 8 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவிலேயே மெயினருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். அவர்களின் 2 தடுப்பூசிகள் போடப்பட்டதற்கான சான்றிதழ்களை ஆய்வு செய்து உறுதிபடுத்திய பின்னரே குளிப்பதற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களின் மனம் கவர்ந்த சுற்றுலா தலமான குற்றாலத்தில் கொரோனா அலை முதன் முறையாக பரவியபோது அருவிகள் மூடப்பட்டன. அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது கடும் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்தாண்டு மார்ச் மாதத்தில் 2வது அலை பரவியதன் காரணமாக ஏப்ரல் 16ம் தேதி முதல் குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நள்ளிரவிலேயே ஐயப்ப பக்தர்கள் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீராட குவிந்தனர். இதற்கிடையில், குற்றாலம் அண்ணா சாலை அருகே கார் பார்க்கிங் கட்டண வசூல் டோல்கேட் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி, 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதற்கான சான்றிதழ்களை சரி பார்த்தனர். அங்குள்ள தபால் அலுவலகம் அருகே சுகாதார அலுவலர்கள், தடுப்பூசி சான்றிதழ்களை மீண்டும் ஆய்வு செய்ததோடு, அவர்களுக்கு வெப்ப பரிசோதனையும் செய்தனர். அதன் பின்னரே குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக தென்காசி எம்எல்ஏ பழனிநாடார், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதயகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேங்காய் உடைத்து, பழம் படைத்து தடாகத்தில் பூக்களை தூவி அருவி குளியலை தொடங்கி வைத்தனர். மெயினருவியில் ஒரே சமயத்தில் 10 ஆண்களும், 6 பெண்களும் ஐந்தருவியில் 10 ஆண்களும் 10 பெண்களும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பழைய குற்றால அருவியில் ஒரே சமயத்தில் 5 ஆண்களும் 10 பெண்களும் குளிக்க சென்றனர். தற்போது மெயினருவியில் ஆண்கள் பகுதியில் தண்ணீர் சுமாராகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்திலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. புலி அருவியில் ஒரு பிரிவில் நன்றாகவும், ஒரு பிரிவில் குறைவாகவும் மற்றொரு பிரிவில் தண்ணீர் இன்றியும் காணப்படுகிறது.

Related Stories: