நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலையோரங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள்: பிப்ரவரி இறுதி முதல் செயல்படுத்த திட்டம்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலையோரங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிப்ரவரி இறுதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைகளில் எந்தெந்த இடங்களில், எத்தனை கி.மீட்டருக்கு இடையே மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்தலாம் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டன. முதற்கட்டமாக மாநில நெடுஞ்சாலைகளில் மழை நீரை சேமித்து வைக்கும் வகையில் இக்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தை பிப்ரவரி இறுதி முதல் செயல்படுத்த நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மழை நீர் சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, சாலைகளின் இருபுறங்களில் மழை நீர் சேகரிப்பு வைப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கி.மீட்டருக்கு இடையே இந்த கட்டமைப்பை வைக்கலாம் என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பணிகளிலும் மழை நீர் சேகரிப்புக்கும் சேர்த்தே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: