எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழா இணையதளம், யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு: சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இளநிலை, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் படிப்புகள், மருத்துவம் சார்ந்த பிற படிப்புகள் என நூற்றுக்கணக்கான படிப்புகள் உள்ளன. அந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது படிப்புகளை நிறைவு செய்கின்றனர். அதன்படி இந்த ஆண்டும் 12,814 மாணவர்கள் பட்டப்படிப்புகளை முடித்துள்ளனர். அவர்களில் 63 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். தற்போது 104 மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இன்று மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் நடைபெறும் விழாவில் பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

மேலும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நிறைவு செய்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பதால் அவர்கள் அனைவரையும் கொரோனா காலத்தில் ஒரே அரங்கில் கூடுவது இயலாது. இதனால், 129 பேருக்கு மட்டும் தற்போது நேரடியாக பட்டங்கள் வழங்கப்படுகிறது. மற்ற அனைவருக்கும் கல்லூரிகளின் மூலம் பட்டங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் மாநில ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி சிறப்பிடங்கள் பெற்ற  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கெளரவிக்கிறார். இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் கலந்து  கொள்கின்றனர். அவர்களுடன் சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவப்  பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்களும், கால்நடை மருத்துவம், திறந்த நிலை, விளையாட்டு அறிவியல் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும்  பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கின்றனர் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: