கடந்த காலங்களில் செப்பனிடப்பட்ட சாலைகளின் தரத்தை ராணுவ பொறியாளர்களை நியமித்து ஆய்வுசெய்ய வேண்டும்: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை

சென்னை: அடையாறு பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவர், பசுமை வழிச்சாலை கேசவபெருமாள் பிரதான சாலை சீரமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. அதை சீரமைக்க வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியின்போது 2017 டிசம்பர் 6ம் தேதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் புகார் அளித்தார். அதை விசாரித்த உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் அந்த சாலையை சீரமைக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இது தொடர்பான தகவலை ேகட்டு முருகேஷ், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதையடுத்து, தனக்கு உரிய தகவல் அளிக்காததால் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.

இதை விசாரித்த மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ் அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் தனக்கு தகவல் வழங்கப்படவில்லை என்று 2018 டிசம்பர் 31ல் புகார் அளித்துள்ளார். அவருக்கு அடையாறு மண்டல அலுவலரான தகவல் அதிகாரி முழுமையான தகவல் அளிக்காததால், புகார் அளித்த மாதத்திலிருந்து 2021 மார்ச் வரை 27 மாதங்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் தகவல் அதிகாரி இழப்பீடு வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாகும்.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், தமிழக அமைச்சர்களின் குடியிருப்புகள், அதிகாரப்பூர்வ அரசு இல்லங்கள் உள்ள இந்த சாலை மிக முக்கியமான சாலையாகும். மனுதாரர் உள்ளாட்சி முறை மன்றத்தை நாடிய பிறகு சீரமைக்கப்பட்ட இந்த சாலை சரியாக அமைக்கப்படாததால் தண்ணீர் தேங்கியுள்ளது.

 அந்த சாலையில் வேகத்தடையும் சரியாக அமைக்கப்படவில்லை. எனவே, சென்னையின் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்பட அனைத்து சாலைகளையும் ஆய்வு செய்வது அவசியமாகிறது. அரசு மற்றும் நீதிமன்றத்தால் ஒப்பந்தம் எடுப்பவர்கள் ஏற்கனவே உள்ள சாலைகளை தோண்டி எடுத்துவிட்டு சாலை உயரம் அதிகரிக்கப்படாமல் புதிய சாலையை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், மீண்டும் இதே தவறுகள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாலை அமைக்கும் பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு சாலை அமைப்பு குறித்து சரியாக தெரியாததுதான். அதிகாரிகளும் ஒப்பந்தகாரர்களும் சாலை அமைக்கும் பணியில் இருப்பதில்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

 தூய்மை பணியாளர்களும், கொசு மருந்து அடிப்பவர்களும், கொரோனா காலத்தில் நோய் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தொடர்ந்து செயல்பட்டும் வருகிறார்கள். ஆனால், சாலைகள் மற்றும் பாலங்கள் துறை மற்றும் மழைநீர் வடிகால் பிரிவு அதிகாரிகள்தான் தங்கள் பணியை சரியாக செய்யவில்லை. இதனால்தான் மக்களுக்கு மழைக்காலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சென்னை பெருநகர மாநகராட்சி என்ற பொது அதிகார அமைப்பிற்கு இந்த ஆணையம் கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்குகிறது.

 சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் சாலைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் கடந்த முறை செப்பனிட்ட அனைத்தையும் மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீசில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனுபமிக்க ராணுவ அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். இதனால் ராணுவத்தில் அவர்கள் செயல்பட்டதுபோல் குறுகிய காலத்தில் பணிகளை முடித்து விடுவார்கள். சரியாக அமைக்கப்படாத சாலைகள், மழைநீர் வடிகால்களை அதே ஒப்பந்ததாரர்களின் சொந்த செலவில் சீர் செய்ய வைத்தால் தமிழகத்தில் உள்ள மற்ற ஒப்பந்தகாரர்கள் மற்றும் பொறியாளர்கள், பணியாளகள் தங்களது பணியை சரியாக செய்ய வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சொந்த செலவில் சீரமைக்க வேண்டும்

விரைவில் சேதமடையும் சாலைகளை ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் அவர்களின் சொந்த பணத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த பணிகளை மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீசில் பணியாற்றிய ராணுவ அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

அதிகாரிகளுக்கு கடிவாளம்

ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை என்றால் சரியாக அமைக்கப்பட்டுள்ளதாக தவறான சான்றிதழ் அளித்திருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: