நாகப்பட்டினம், நாகூர் கிராமத்தில் ரூ.2.25 கோடியில் நெய்தல் பாரம்பரிய பூங்கா; அரசாணை வெளியீடு

சென்னை: நாகப்பட்டினம், நாகூர் கிராமத்தில் ரூ.2.25 கோடியில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க தமிழக அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: கடலும் கடல் சார்ந்த இடமான நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் கிராமத்தில் தோட்டக்கலை துறைக்கு ஒதுக்கப்பட்ட 7.56 ஏக்கர் பரப்பில் ரூ.2.25 கோடியில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடலும், கடல் சார்ந்த மக்களின் வாழ்க்கை முறை, உணவு, தொழில், காலநிலை, தாவர மற்றும் விலங்கினங்கள், பொழுதுபோக்கு போன்றவற்றின் அடையாளமாக இந்த பூங்கா அமையும். பல்வேறு அல்லி இனங்களுடன் கூடிய குட்டைகள் அமைக்கப்படும்.

நெய்தல் நிலத்திற்குரித்தான புன்னை மரம், பனை மரம், நாவல் மற்றும் தென்னை மரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மீன் மற்றும் இதர கடல் வளங்களான பவளப்பாறை, முத்து சிற்பி போன்றவற்றை செடிகளால் அழகு வடிவங்களில் அமைக்கப்படும். கடல்வளம் மற்றும் மீனவர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் படகு வடிவிலான இருக்கைகள் மற்றும் குவியம் அமைக்கப்படும். மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பினை, ரூ.2.25 கோடி நிதியை பண்ணை வரவின நிதியிலிருந்து பயன்படுத்தி செயல்படுத்த ஆணை வெளியிடப்படுகிறது.

Related Stories: