தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 400 வங்கிகள் மூடல்-3,500 ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்

நெல்லை : பொதுத்துறை வங்கிகளை தனியார்  மயமாக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் 3 ஆயிரத்து 500 பேர் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் 400 வங்கி கிளைகள்  மூடப்பட்டன.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க  ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நடப்பு மக்களவை கூட்டத்தொடரில் இரண்டு  பொதுத்துறை வங்கிகளையும் ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார்  மயமாக்க மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவை வாபஸ் பெறக்கோரியும், வங்கிகள்  தனியார் மயமாக்கலை கண்டித்தும் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். இதுதொடர்பாக ஒன்றிய அரசு இந்திய வங்கிகள்  சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தியது. அப்போது இந்த கூட்டத் தொடரிலேயே தனியார் மயமாக்கல் மசோதா தாக்கல் செய்யப்படுவதை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய வங்கிகள் சங்கம் விடுத்த கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து திட்டமிட்டபடி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர், அதிகாரிகள் இரண்டு நாள் வேலை  நிறுத்தப் போராட்டத்தை நேற்று துவக்கினர். இதையொட்டி நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி மாவட்டங்களில் 400 வங்கி கிளைகள் மூடப்பட்டன. மொத்தம் 3500 அதிகாரிகள் ஊழியர்கள்  இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என 9 சங்கங்களும் இணைந்த ஒருங்கிணைந்த வங்கி ஊழியர் கூட்டமைப்பு பங்கேற்றது. இதனால் வங்கிகளில் பண பரிவர்த்தனை, பணம் டெபாசிட், பணம் எடுத்தல் உள்ளிட்ட அனைத்து பரிமாற்றங்களும் பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக  பாளையங்கோட்டை இந்தியன் வங்கி முன்பு வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் விக்டர் துரைராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் திலகர், தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு எட்வின், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்லஸ், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சிவசங்கர் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது வங்கிகளில் வராக் கடனை வசூல் செய்வதை விட்டு விட்டு தனியார் மயமாக்குவதை கண்டித்து அதிகாரிகள், ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர். 2வது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.

Related Stories: