ஆதம்பாக்கம், நங்கநல்லூரில் 4 இடங்களில் சாலை நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளம்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதிகளில் பூமிக்கு அடியே செல்லும் பாதாள சாக்கடை குழாய்களில் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியதில், அங்கு 4 இடங்களில் 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. அவற்றை குடிநீர் வாரிய அதிகாரிகள் துரித கதியில் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக, பூமிக்கு அடியே செல்லும் பாதாள சாக்கடை குழாய்களில் அதிக அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களில் 4க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு, அங்கு 10 அடி ஆழத்துக்கு ராட்சத பள்ளம் தோன்றியது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் மாற்றுவழி பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில், நங்கநல்லூர் 5-வது பிரதான சாலையில் இதேபோல் நேற்று பாதாள சாக்கடை குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால், சாலையின் நடுவே 10 அடி ஆழத்துக்கு ராட்சத பள்ளம் உருவானது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து ஆலந்தூரில் உள்ள சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் குடிநீர் வாரிய பொறியாளர் ஜான்சிராணி தலைமையில் 50க்கும் மேற்பட்ட கழிவுநீரகற்று வாரிய இயந்திரங்களுடன் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அங்கு பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட வெடிப்புகளை சரிசெய்து, அப்பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், நங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பாதாள சாக்கடை குழாய்கள் வெடிப்பு மற்றும் ராட்சத பள்ளங்கள் உருவாகி வருகின்றன. இவற்றுக்கு நிரந்தர தீர்வு காண குடிநீர் வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: