தமிழகத்திலும் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்; நைஜீரியாவிலிருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்த 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.! இன்று பரிசோதனை முடிவு தெரிய வாய்ப்பு

சென்னை: தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 7 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுக்கான பரிசோதனை முடிவு இன்று தெரிய வாய்ப்புள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.    

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா தற்போது உலகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 70க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக ஓமிக்ரான் கருதப்படுகிறது. இந்தியாவில் முதலில் கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை இந்தியாவில் வெறும் 2 பேருக்கு மட்டுமே ஓமிக்ரான் பாதிப்பு மட்டுமே இருந்தது. கர்நாடகாவில் மேலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதன் பின்பு வேகமாக பரவியதால் தற்போது பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அங்கு இதுவரை 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நினைக்க முடியாத வேகத்தில் ஓமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் நேற்று நுழைந்தது. நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த நபருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் தோஹா வழியாக சென்னை வந்த நிலையில், அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு ஜீன் மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில், அவருக்கு ஓமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய உறவினர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 பேருக்கு கொரோனா தொற்றும், மரபியல் மாற்றமும் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த வளசரவாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கும் மரபியல் மாற்றம் கொண்ட தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே அவருடன் சேர்த்து 7 பேரின் மாதிரிகள்  ஒமிக்ரான் வகை தொற்றா என கண்டறிய பெங்களூருக்கு ஆய்வுக்காக  அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்ட்டியூட் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளானவர் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆய்வுக்காக அனுப்பட்டவர்களுக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இதனால் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான  நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அதிக பாதிப்புள்ள 12  நாடுகளிலிருந்து வரும் பயணிகள் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றனர். இதுவரை 12,039 நபர்களுக்கு ெகாரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு  குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வந்த 63,411 பயணிகளில் 2 சதவீதம்  நபர்களுக்கு, அதாவது 1,834 நபர்களுக்கு ெகாரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 40 பேருக்கு  கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. இதில், 36 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.  அவர்களின் மாதிரிகள் மீண்டும் ஆய்வு செய்வதற்காக  பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 7 பேரும் மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: