லக்கிம்பூர் படுகொலை குறித்து விவாதம் நடத்துங்கள்!: எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின..!!

டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின. நாடாளுமன்ற மக்களவை தொடங்கியவுடன் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அப்போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை பற்றி பேசுவதற்கு எதிர்கட்சிகளை அனுமதிக்க வேண்டும். அமைச்சருக்கு உள்ள தொடர்பு, சதிச்செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது ஆகியவை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், விவசாயிகள் படுகொலைக்கு காரணமான அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் மக்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். லக்கிம்பூர் படுகொலை விவகாரத்தில் அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மாநிலங்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்ததால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

Related Stories: