நெல்லூர், பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்களில் துணிகரம் ஆட்டோவில் வந்து கோயில்களில் திருடிய கும்பல் கைது

* பஞ்சலோக சிலைகள் பறிமுதல் * போலீசாருக்கு மக்கள் பாராட்டு

திருமலை: நெல்லூர், பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்களில் ஆட்டோக்களில் வந்து கோயில்களில் திருடி வந்த கொள்ளை கும்பலை தனிப்படை ேபாலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பஞ்சலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விரைந்து செயல்பட்ட தனிப்படை போலீசாரை கிராமமக்கள் பாராட்டி உள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ேகாயில்களில் ெகாள்ளை சம்பவம் அதிகளவில் நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் வகையில் எஸ்.பி. உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில், களுவாய் மண்டலம், குல்லூர் கிராமத்தில் அச்சுத சுவாமி கோயிலில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய அச்சுத சுவாமி பஞ்சலோக சிலைகளை சிலர் திருடிச் சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லூர், பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்களில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து திருடி வந்த 6 பேர் கொண்ட  கும்பல்களை நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.

இந்த கும்பல் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் உள்ள 5 கோயில்களில் சிலைகள், உண்டியல், மைக் செட்களை திருடி சென்றனர்.  கடப்பாவில் 3 கோயில்களிலும், பிரகாசம் மாவட்டத்தில் 2 கோயில்களிலும் மற்றும் தேவாலயத்திலும் திருடி உள்ளனர். இந்த கும்பலுக்கு, பிரகாசம் மாவட்டம் கித்தலூரை சேர்ந்த சேக்லால் பாஷா தலைவனாக செயல்பட்டுள்ளான். இவருடன் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை கூட்டு வைத்துள்ளனர்.அதன்படி இந்த கும்பல், திருட்டுக்கு முன்பு ஆட்டோவில்  கொள்ளையடிக்கும். பின்னர், கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இரவு நேரத்தில் ஆட்டோவில் வந்து இருவர் வெளியில் காவலுக்கு நிற்பார்கள். மீதி நான்கு பேர் உள்ளே சென்று கோயில் கதவுகளை உடைத்து சுவாமி சிலைகள், உண்டியல், நகைகளை திருடி வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பஞ்சலோக சிலைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சிலைகளை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்த எஸ்.பி. விஜயராவ் மற்றும் போலீசார் குல்லூர் கிராம மக்கள் பாராட்டினர்.

Related Stories: