கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: 4 பேர் உயிர் தப்பினர்

கூடுவாஞ்சேரி: ஜிஎஸ்டி சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதில், சென்ற 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை நெற்குன்றம், பால்வாடி விரிவு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் இசக்கிமுத்து (26). திருநெல்வேலியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார். அங்கிருந்து தனது மைத்துனர் பாண்டியன் என்பவரது காரை எடுத்துக்கொண்டு, குடும்பத்துடன் 4 பேர் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நேற்று காலை 7.30 மணியளவில் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது காரின் முன்பகுதியில் திடீரென புகை வந்தது. இதை பார்த்ததும், காரை நிறுத்தி, அதில் இருந்த 4 பேரும் அவசரம் அவசரமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிநதது. இதையொட்டி, பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், ஜிஎஸ்டி சாலையின் இரு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார், மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, தீப்பற்றி எரிந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதையடுத்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் ஒருமணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: