வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழா; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: 2வது ஆண்டாக பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது

திருச்சி: பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த 3ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து 4ம் தேதி பகல்பத்து உற்சவம் துவங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்றுமுன்தினம் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நேற்று நடந்தது.

இதற்காக அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து புறப்பட்டார். ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் சென்றார். அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசலை நம்பெருமாள் கடந்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், பி.டி.ஆஷா, பவானி சுப்புராயன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி உட்பட பலர் பங்கேற்றனர். கோயில் ஊழியர்களின் ரங்கா, ரங்கா கோஷத்துடன் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபத்துக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில் காலை 5 மணி முதல் எழுந்தருளினார்.

இதைத்தொடர்ந்து காலை 7 மணி முதல் பொதுஜன சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து ராப்பத்து முதல் நாள் உற்சவம் நேற்று துவங்கியது. வரும் 23ம் தேதி வரை பக்தர்கள் உற்சவர் நம்பெருமாளை ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் சொர்க்க வாசல் திறப்பின் போது பக்தர்கள் கூட்டத்துடனும், கோஷத்துடனும் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடப்பார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு சொர்க்கவாசல் திறப்பை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதே போல் இந்தாண்டும் நம்பெருமாள் பக்தர்களின் ரங்கா, ரங்கா கோஷமின்றி சொர்க்கவாசலை கடந்தார். கோயில் பட்டர்கள், ஊழியர்கள், விஐபிக்கள் மட்டுமே நம்பெருமாளுடன் சொர்க்கவாசல் வழியாக வந்தனர்.

19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகையில் விழா

அமாவாசை, பவுர்ணமி துவங்கியதில் இருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப்படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். இதில் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனை தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. மணவாள மாமுனிகள் சொன்னபடி வைகுண்டஏகாதசி திருவிழா கார்த்திகையில் வந்தது. அதேபோல் 19 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கார்த்திகையில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

அடுத்த மாதம் மற்ற கோயில்களில் வைகுண்ட ஏகாதசி: அமைச்சர் தகவல்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிழ்ச்சியில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: ஸ்ரீரங்கம் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நடந்துள்ளது. அடுத்த மாதம் மற்ற கோயில்களில் வைகுண்ட ஏகாதசி  நடைபெற இருக்கிறது. கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் பரவும் வேகத்தை பொறுத்து, பக்தர்கள் மகிழ்கின்ற அளவிற்கு ஒரு நல்ல முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: