நாட்டுப்புற கலைகளை அழியாமல் காக்கும் பொருட்டு தனியார் நிறுவனம், பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும்: தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் சமூக பாதுகாப்பினை கருத்திற் கொண்டு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் உருவாக்கியது. தமிழகத்தில் நாட்டுப்புற கலைகளை அழியாமல் பாதுகாக்கும் பொருட்டும், அதனை மக்களிடையே பரப்புவதும் முக்கியமான ஒன்றாகும். இந்த கருத்தை நினைவில் கொண்டு சென்னை சங்கமம், சுற்றுலா நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி, விழாக்கள் போன்றவற்றில் நாட்டுப்புறக் கலைகளை பங்குபெறச் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதவிர, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தமிழ் பண்பாடுகளை சீரழிக்கும் வகையிலும், வரம்பு மீறும் வகையில் ஆபாச ஆடல் பாடல்கள், அரைகுறை ஆடை நடன நிகழ்ச்சிகளை தடுத்து, நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் காவல்துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசு நாட்டுப்புறக் கலைகளை மக்களிடையே பரப்பி, கலைஞர்களை ஊக்குவிப்பு செய்தாலும் தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் மற்றும் பல்கலைக்கழகங்களும் இந்நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது.

தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் வளர்ச்சி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்திடும் நிறுவன விழாக்கள் பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் நாட்களில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளை நடத்திட தக்க நடவடிக்கை தொழில் மற்றும் வணிகத்துறை ஆணையரகம், தமிழ்நாடு மின்னணு நிறுவனமும் எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடத்தப்பெறும் அனைத்து விழாக்களிலும், முக்கிய தினங்களிலும் (குடியரசு தினம், சுதந்திர தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், பண்பாட்டு தினம், பள்ளி தினம், விளையாட்டு தினம் போன்றவை) நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளை நடத்திட பள்ளிக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்கம், மருத்துவ கல்வி இயக்ககம், சட்டக் கல்வி இயக்ககம், அனைத்து பல்கலைக் கழகங்களின் பதிவாளர்கள் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

* முதல்வர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி கட்டாயம்

முதல்வர் கலந்துகொள்ளும் தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை அனைத்து துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் தவறாது கடைபிடிக்கும்படியும் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: