வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம், லட்சதீப விழா

வேலூர்: கார்த்திகை கடைசி சோமவார சங்காபிஷேக விழா நேற்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் 4 திங்கட்கிழமைகளிலும்  சோமவார சங்காபிஷேக விழா வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 3 திங்கட்கிழமைகளிலும் சோமவார சங்காபிஷேக பூஜை நடந்தது. கடைசி கார்த்திகை மாத சோமவாரமான நேற்று அதிகாலை ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையடுத்து தொடர்ந்து 1,008 சங்காபிஷேகமும், லட்ச தீப விழாவும் நடந்தது. இதையடுத்து கோயில் வளாகத்தில் உற்சவர் உலா நடந்தது. சங்காபிஷேகம் மற்றும் லட்சதீப விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர்.

சுவாமி தரிசனம் ரத்து: தொடர் மழை காரணமாக வேலூர் கோட்டை அகழி முழுமையாக நிரம்பி ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் புகுந்தது. கடந்த 29ம்தேதி கோயில் கருவறைக்குள்ளும் தண்ணீர் சென்றது. இதனால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. கோயில் உற்சவ மூர்த்திகள் ராஜகோபுரத்தில் அமர்த்தப்பட்டு பூஜைகள் நடந்து வந்தது. இந்நிலையில், கோயில் வளாகத்தில் சூழ்ந்த தண்ணீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி ஒருவாரம் நடந்த நிலையில் கடந்த 9ம்தேதி தண்ணீர் முழுவதும் வடிந்தது. ஆனால் 10ம்தேதி காலை 6 மணிக்கு மீண்டும் உட்பிரகாரத்தில் தண்ணீர் தேங்கியது.

இந்த தண்ணீர் அன்று மாலை முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. இதையடுத்து 11ம்தேதி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் கோயில் வளாகத்தில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் தொடர்ந்து அகற்றினாலும் மீண்டும் மீண்டும் தண்ணீர் சேர்ந்தது. இதனால் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து ராஜகோபுரத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு தொடர்ந்து பூஜைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: