குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் தென் பிராந்திய ராணுவ தளபதி ஆய்வு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக உதவியதற்கு தென் பிராந்திய தளபதி லெப்டினன்ட் கர்னல் அருண் நன்றி கூறினார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் மீதமுள்ள பொருட்களை உடைத்து எடுத்து செல்லும் பணிகள்  நேற்று 2ம் நாளாக நடைபெற்றது. நேற்று ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தென் பிராந்திய தளபதி லெப்டினன்ட் கர்னல் அருண் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு  மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரில் நேற்று  நினைவஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து விபத்தில் உதவிய கிராம மக்களை சந்திதத்து நன்றி கூறினார். அவர் விபத்து ஏற்பட்ட அன்று மீட்பு பணிக்கு உதவிய மாவட்ட கலெக்டர், மருத்துவர்கள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், 108 ஊழியர்கள்,  மின்சாரத்துறையினர், வருவாய் துறையினர், அப்பகுதியை சேர்ந்த செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து நஞ்சப்பன்சத்திரம் பகுதிக்கு நேரில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ஹெலிகாப்டர் விபத்து குறித்து முதலில் காவல்துறை மற்றும் குன்னூர் ராணுவ மையத்திற்கு தகவல் கொடுத்த கிருஷ்ணசாமி மற்றும் குமார் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கினார். அதனைத்தொடர்ந்து அந்த கிராம மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் கம்பளி போன்ற உதவி பொருட்களை வழங்கினார்.

தென் பிராந்திய தளபதி லெப்டினன்ட் கர்னல் அருண் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக உதவியது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  நன்றி. பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் உள்ள கேப்டன் வருண்சிங்கின் உடல்நிலை மோசமாக உள்ளதால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: