பள்ளிகள் மூடியதால் ஏற்பட்ட கற்றல் இழப்பால் முழு தலைமுறையும் ஏழையாகும் அபாயம்: உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை

புதுடெல்லி: ‘இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட கற்றல் இழப்புகள் ஒரு முழு தலைமுறையையும் ஏழ்மைப்படுத்தும் அபாயம் உள்ளது’ என உலக வங்கி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டதால், நடுத்தர, ஏழை நாடுகளில் மாணவர்களின் கல்வியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை - மீட்சிக்கான பாதை’ என்ற தலைப்பில் யுனெஸ்கோ மற்றும் யுனிசெப் ஆகியவற்றுடன் இணைந்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நெருக்கடி உலகெங்கிலும் கல்வி அமைப்பை சீர்குலைத்துள்ளது. தற்போது 21 மாதங்கள் ஆகிவிட்டநிலையில், லட்சக்கணக்கான குழந்தைகளுக்கான பள்ளிகள் இன்னமும் மூடியே இருக்கின்றன. பலரும் மீண்டும் பள்ளிக்கு திரும்ப முடியாத நிலையை உருவாக்கி உள்ளது.

பல குழந்தைகள் அனுபவிக்கும் கற்றல் இழப்பு தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் கற்றல் குறைபாட்டிற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பது, இந்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் உலகப் பொருளாதாரங்களின் எதிர்கால உற்பத்தி, வருவாய் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த தலைமுறை குழந்தைகள் வருவாய் ஈட்டுவதில் பாதிப்பு ஏற்பட்டு, ஒரு முழு தலைமுறையையும் ஏழ்மையில் தள்ளப்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, பிரேசில், பாகிஸ்தான், கிராமப்புற இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மெக்சிகோவில் மாணவர்கள் கணிதம் மற்றும் வாசிப்பில் கணிசமான இழப்புகளை சந்தித்துள்ளனர். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் தொலைநிலைக் கற்றல் வசதியை பெறும் நிலையில் இல்லை.

எனவே, பள்ளிகளை மீண்டும் திறப்பது உலகளவில் முதன்மையான மற்றும் அவசர முன்னுரிமையாக இருக்க வேண்டும். கற்றல் இழப்புகளை ஈடுசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதுான் இந்தத் தலைமுறை மாணவர்கள் குறைந்தபட்சம் முந்தைய தலைமுறையின் அதே திறன்களைப் பெறுவதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* பள்ளிகள் மூடியதால் ஏற்பட்ட கற்றல் இழப்பு காரணமாக, தற்போதைய தலைமறை மாணவர்கள் தங்களின் வாழ்நாள் வருவாயில் மொத்தம் ரூ.1,275 லட்சம் கோடியை இழக்க நேரிடும் என்கிறது உலக வங்கி. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதம்.

* பள்ளிகள் மூடப்பட்டதன் தாக்கம் முந்தைய கணிப்புகளை விட மிக அதிகமாக உள்ளது. இதற்கு முன், கடந்த 2020ல் ரூ.750 லட்சம் கோடி வருவாய் இழப்பு இருக்கும் என கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* கற்றல் இழப்புகளை சரிகட்ட, மீள்நடவடிக்கைகளுக்கு அதிகளவு நிதியை அரசாங்கங்கள் ஒதுக்க வேண்டுமெனவும் உலக வங்கி வலியுறுத்தி உள்ளது.

Related Stories: