சிட்லபாக்கம் ஏரியில் தடையை மீறி குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை: நகராட்சி நிர்வாக இயக்குனர் எச்சரிக்கை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. சிட்லபாக்கம் பேரூராட்சியாக இருந்தபோது, இந்த ஏரியின் அருகே உள்ள குப்பை கிடங்கு மற்றும் ஏரியின் வடக்கு பகுதியில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதுகுறித்த செய்தி  நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்தது. அப்போது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சார்பில், குப்பை கிடங்கு 6 மாதங்களுக்குள் அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. எனவே, அவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தபடி,  குப்பை கிடங்கை அகற்ற எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. எனவே, பசுமை தீர்ப்பாயம் மீண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட உறுதியை மேற்கோள்காட்டி வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்தது. மேலும், மறு விசாரணையில் குப்பை கிடங்கின் தற்போதைய நிலை குறித்த உண்மையான அறிக்கை அளிக்க பேரூராட்சியின் செயல் அலுவலர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், சிட்லபாக்கம் பேரூராட்சி தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டதால், செயல் அலுவலர் தரப்பில் அறிக்கை அளிக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகமும், தீர்ப்பாய உத்தரவை கண்டுகொள்ளாத நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உண்மை நிலை அறிக்கையை சமர்பித்தது. அதில் குப்பை கிடங்கு மிக மோசமாக உள்ளதாகவும், பேரூராட்சி நிர்வாகம், அதை முறையாக பராமரிக்காததற்காக விதிக்கப்பட்ட ரூ.8 லட்சம் அபராதம் செலுத்தாததையும் தெரிவித்திருந்தது. இதனால் குப்பை கிடங்கை அகற்றி செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அதுபற்றி உண்மை அறிக்கையை டிசம்பருக்குள் அளிக்க வேண்டும்.

இல்லையெனில் தீர்ப்பாய சட்டம் 2010 விதிகளின்படி சட்டபிரிவுகள் 25 மற்றும் 28ன் கீழ் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்தது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி முதல் குப்பை கிடங்கில் உள்ள குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அகற்றப்படும் குப்பை காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆப்பூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. மொத்தம் உள்ள 800 டன் அளவு தேங்கி இருந்த குப்பை கழிவுகளில் நேற்று வரை 600 டன்னுக்கும் மேலான குப்பை அகற்றப்பட்டது.

இந்த பணிகளை விரைவுபடுத்த, தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டதின் பேரில், நகரட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று இந்த பகுதியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாநகராட்சி பொறியாளர்கள் ஆனந்த ஜோதி, பெட்சி ஞானலதா, சுகாதார அலுவலர் மொய்தீன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்து குப்பையை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா கூறுகையில், ‘‘இந்த பகுதியில் இருந்து 2 நாட்களுக்குள் குப்பை மொத்தமும் அகற்றப்படும். மீண்டும் இந்த பகுதியில் குப்பை கொட்டப்படாது. அதை மீறி யார் குப்பை கொட்டினாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: