பள்ளிகொண்டா அருகே நள்ளிரவில் சந்திப்பு திருமணமான போலீஸ்காரரை மடக்கி மாஜி காதலிக்கு தாலி கட்ட வைப்பு: 2 அண்ணன்களிடம் விசாரணை

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் திருமணமான போலீஸ்காரர் நள்ளிரவில் மாஜி காதலியை சந்திக்க வந்தபோது, அவரை தாக்கி அந்த பெண்ணுக்கு உறவினர்கள் தாலி கட்ட வைத்தனர். இது தொடர்பாக அவரது அண்ணன்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அத்தியூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜி(26). இவர் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை காவலராக சேவூரில் பணியாற்றி வருகின்றார். பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண், எம்சிஏ பட்டதாரி. இவர்கள் இருவரும் 1 வருடத்திற்கும் மேலாக பழகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு விஜிக்கு அவரது குடும்பத்தினர் ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜபாளையத்தை சேர்ந்த சாந்தரூபி(22) என்பவரை திருமணம் செய்து வைத்தனர். அதன்பின் விஜி, மாஜி காதலியிடம்  இருந்து விலக ஆரம்பித்திருக்கின்றார். இதனை புரிந்து கொண்ட இளம்பெண், தன் உறவினர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் இரவு விஜிக்கு போன் செய்த இளம்பெண், ‘‘உன்னை நேரில் சந்தித்து பேச வேண்டும். என் வீட்டிற்கு வா’’ என்று அழைத்துள்ளார். அவரும் அங்கு வந்துள்ளார். இதனையடுத்து நள்ளிரவு 11.30 மணியளவில் விஜியும், இளம்பெண்ணும் தனி அறையில் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவரது அண்ணன்கள் சிவக்குமார்(41), வினோத்(26), அக்கா கணவர் சத்யராஜ்(29) மற்றும் உறவினர்கள் அவரை மடக்கிப்பிடித்து, தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறாயா என்று கேட்டு கைகளாலும் ஆயுதங்களாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் வீட்டின் அருகிலுள்ள ஒரு கோயிலில் வைத்து தாலியை கொடுத்து இளம்பெண் கழுத்தில் கட்டுமாறு கூறினர். ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக கூறி மறுத்த  போலீஸ்காரர் விஜியை மீண்டும் தாக்கி, இளம்பெண் கழுத்தில் கட்டாயமாக தாலி கட்ட வைத்துள்ளனர்.

பின்னர், விஜியின் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் பலத்த காயத்துடன் விஜியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பும் விடிய விடிய பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, விஜியின் உறவினர்கள் நேற்று அதிகாலை பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் இளம்பெண்ணின் அண்ணன்கள் சிவக்குமார், வினோத் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories: