33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு எப்போது?: மக்களவையில் கனிமொழி எம்.பி. கேள்வி

புதுடெல்லி:  மக்களவை திமுக எம்பி கனிமொழி ஜீரோ கேள்வி நேரத்தில் பேசிய போது, `மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 25 ஆண்டுகளாகின்றன. ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை’ என்று பேசினார். ஜவுளித்துறை சரியும் சூழல்: மாநிலங்களவை திமுக எம்பி வில்சன் நேற்று பேசுகையில், `நாட்டின் 2வது மிகப் பெரிய உற்பத்தியாக பருத்தி, நூல் உள்ளது. இது ஜிடிபி.யில் 2.3 சதவீதமாக உள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து மட்டும் 50% உற்பத்தி செய்யப்படுகிறது. பருத்தி, நூல் விலையேற்றத்தினால், தமிழகத்தின் 50 லட்சம், வெளிமாநிலத்தின் தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் என மொத்தம் 53 லட்சம் பேர் வேலையிழக்கும் சூழல் நிலவுகிறது. மேலும், இவற்றை பதுக்கி வைப்பதால் தட்டுப்பாடு, விலையேற்றம் ஏற்படுகிறது. ஜவுளித்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில், இத்துறை அதலபாதாளத்திற்கு சரியும் சூழல் ஏற்படும்,’’ என்று தெரிவித்தார்.

மருந்தியல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு : மாநிலங்களவை திமுக எம்பி. ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் பேசுகையில், `இந்தியாவில்  இருக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஒருங்கிணைத்து அத்துறை தற்சார்பு துறையாக  செயல்பட ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் போதிய நிதியை உடனடியாக ஒதுக்க  வேண்டும். கவுன்சிலிங் குழு உறுப்பினர் நியமனத்தில் மருந்தியல், ஆராய்ச்சி  நிறுவனத்தையும் குழுவில் சேர்க்க வேண்டும். சித்தா. ஆயுர்வேத மருந்தகங்கள்  சார்ந்த கல்வி நிறுவனங்களையும் தொடங்க வேண்டும். ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு  நிதி ஒதுக்குவதாக மாநிலங்களவை, மக்களவையில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால்  அது ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது, செயல்படுத்தப்படுவதில்லை. எனவே,  குறிப்பிட்ட காலக் கெடு நிர்ணயித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்,’’  என்று கூறினார்.

அணுக்கழிவு பாதுகாப்பாக அகற்றப்படுகிறதா? மக்களவை திமுக எம்பி கதிர் ஆனந்த், `கல்பாக்கம், கூடங்குளம் அணுக்கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து, ஒன்றிய இணையமைச்சர் ஜிஜேந்திர சிங், ‘கல்பாக்கம், கூடங்குளம் அணுமின்நிலையங்களின் கதிர்வீச்சு அளவு அதனை சுற்றியுள்ள காற்று, நீர், தாவரங்கள், பயிர்கள், கடல் உணவுகள் போன்ற சுற்றுச்சூழல் அளவீடுகளை கண்காணிப்பதன் மூலம் பெறப்பட்ட அளவு, நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைவாகும். இவற்றை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அவ்வப்போது கண்காணிக்கப்படுகிறது என்றார். இதே போல், கடந்த 5 ஆண்டுகளில் எஃகு பொருட்களுக்கான விலை நாட்டில் 115 சதவீதம் அதிகரித்திருப்பது ஏன்? என்று அவர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு, `உள்கட்டமைப்பு துறையில் பயன்படுத்தப்பட்ட இரும்பு, எஃகு முக்கிய பொருட்களின் சராசரி சந்தை விலை 115 சதவீதம் அதிகரித்துள்ளது. சுரங்கம் மற்றும் கனிம கொள்கை சீர்திருத்தங்கள் எஃகு உற்பத்தியை அதிகரிக்கின்றன’ என்று பதிலளித்துள்ளது.

Related Stories: