கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி தாம்பரம்-தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

சென்னை: கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையொட்டி டிசம்பர், ஜனவரி மாதங்களில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்-தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிலாஸ்பூர் மற்றும் தாதர் ரயில்களின் காலிப் பெட்டிகளைப் பயன்படுத்தி நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்திற்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் முழுவதும்  இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது: கடந்த நவம்பர் 7ம் தேதி நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட ரயிலுக்கு 6.5 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. 1216 பயணிகள் பயணம் செய்யக்கூடிய அந்த ரயிலில் 100 சதவீதம் நிரம்பியுள்ளது.

அதாவது, இந்த சிறப்பு ரயிலின் பாதிக்கு மேற்பட்ட இருக்கைகள் நெல்லை, தென்காசி வழித்தடத்தில் நிரம்பியுள்ளது. தற்போது டிசம்பர், ஜனவரி என இரண்டு மாதங்களும் பண்டிகை மாதங்களாக இருப்பதால் நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிலாஸ்பூர் மற்றும் தாதர் காலிப் பெட்டிகளைப் பயன்படுத்தி சிறப்பு ரயில்கள் இயக்குவதன் மூலம் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 2 ரயில்களின் மூலம் ரூ.1.5 கோடிக்கும் மேல் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கும். மேலும் பயணிகள் மற்றும் பக்தர்களின் பயண தேவையும் நிறைவேறும். எனவே தெற்கு ரயில்வே உடனடியாக இந்த கோரிக்கையை ஏற்று நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்திற்கு  வாரம் இருமுறை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: