உழைக்கும் மகளிர் விடுதிகள் பற்றாக்குறையை போக்க திட்டம் என்ன?: ஒன்றிய அரசுக்கு டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: உழைக்கும் மகளிர் விடுதிகள் பற்றாக்குறையை போக்க  திட்டம் என்ன என்று திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக  குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு  மக்களவையில்  பல்வேறு கேள்வி எழுப்பினார். நாட்டில் நிலவும் உழைக்கும் மகளிருக்கான  விடுதி வசதிகளில் நிலவும் கடும் பற்றாக்குறை பற்றி ஒன்றிய அரசு அறிந்துள்ளதா? இந்தப் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசின் செயல்திட்டம் என்ன?  இதற்காக மாநில மற்றும் யூனியன் பிரதேச  அரசுகளுக்கும், மகளிர் விடுதி வசதிகளை அளித்திடும் அமைப்புகளுக்கும் கடந்த ஆண்டுகளில் எவ்வளவு நிதி உதவி வழங்கப்பட்டது, மாநில வாரியாக எத்தனை மகளிர் விடுதிகள் உருவாக்க அனுமதிக்கப்பட்டு, எத்தனை விடுதிகள் இயக்கத்தில் உள்ளன  என்று, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

 இதற்கு பதில் அளித்த ஒன்றிய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உழைக்கும் மகளிர் விடுதிகளைப் பொறுத்தவரை பற்றாக்குறை எதுவும் இல்லை. மகளிர் விடுதிகள்  அமைப்பது என்பது தேவையின் அடிப்படையில் மாநில அரசுகள் மற்றும் ஒன்றியப் பகுதி நிர்வாகங்கள் அனுப்பி வைத்திடும் கோரிக்கைகளைப் பொறுத்து மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசு இதற்கென நிதி உதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நாட்டில் மொத்தம் 972 உழைக்கும் மகளிர் விடுதிகளை அமைக்க ஒன்றிய அரசினால் அனுமதிக்கப்பட்டு அவற்றில் 497 விடுதிகள் செயல்பாட்டில் உள்ளன.

தமிழகத்துக்கு 97 விடுதிகள் நிறுவ அனுமதி தரப்பட்டது. அவற்றில் 67 விடுதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. உழைக்கும் மகளிர் விடுதிகள் சரியான முறையில் இயங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும்  அந்தந்த மாவட்ட ஆட்சியர்  தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.

Related Stories: