சிவப்பு தொப்பியால் உத்திரப்பிரதேசத்துக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை: சமாஜ்வாதி கட்சி குறித்து பிரதமர் மோடி கடும் விமர்சனம்

லக்னோ: சிவப்பு தொப்பி உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு சிவப்பு அபாய எச்சரிக்கை என்று சமாஜ்வாதி கட்சி குறித்து பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆளும் பாஜக புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக பிரமாண்ட யாத்திரைகளை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்தும், அதிக இடங்களைக் கைப்பற்றுவது குறித்தும் லக்னோவில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று பிற்பகல் திறந்து வைத்தார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்திற்காக உரத் தொழிற்சாலை உட்பட ரூ.9,600 கோடி மதிப்பிலான தேசிய வளர்ச்சித்திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்; சமாஜ்வாதி கட்சி குறித்து மறைமுகமாக கடுமையாக விமர்சித்தார். சிவப்பு தொப்பியில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சிவப்பு அபாய எச்சரிக்கை தான் என்றார்.

அவர்கள் உங்களின் வலிகளை உணராதவர்கள். உங்கள் வளர்ச்சிக்காக எதுவும் செய்யாதவர்கள் என்றும் விமர்சித்தார். அவர்கள் அதிகாரத்துக்கு ஆசைப்படுவார்கள், அதிகாரத்துக்கு வந்ததும் அவர்களின் சொந்தக் கஜானாவை நிரப்பிக் கொள்வார்கள். அவர்களால் உத்தரப்பிரதேசத்துக்கு வளர்ச்சி இல்லை இவ்வாறு கூறினார்.

Related Stories: