800 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது ஆறானது திருச்சி - திண்டுக்கல் சாலை

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லை. அதேசமயம் மணப்பாறை பகுதியில் நேற்று காலை 2 மணி நேரத்தில் 270 மிமீ மழை கொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத மழையால் குளங்கள் நிரம்பி அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ராஜீவ் நகரில் உள்ள அப்பு அய்யர் குளம் உடைந்து ராஜீவ் நகர், இந்திரா நகர், மஸ்தான் தெரு, பூமார்க்கெட் வீதி, கரிக்கான்குளம், முனியப்பன் கோவில் பகுதி, சொக்கலிங்கபுரம், ஜே.ஜே.நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மணப்பாறை பேருந்து நிலையத்தில் 3 அடி உயரத்திற்கு நீர் தேங்கியது. இதனால் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இந்நிலையில் இன்று தண்ணீர் வடிந்து வருகிறது. பஸ்நிலையம் உள்பட தாழ்வான இடங்களில் உள்ள தண்ணீர் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மணப்பாறை அரியாற்றில் நேற்று 10ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றநிலையில் இன்று 3 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. தொடர்ந்து தண்ணீர் சூழ்ந்துள்ள சிதம்பரத்தான்பட்டி, ஜெ.ஜெ நகர் பகுதிகளை சேர்ந்த 100 பேர் மணப்பாறை நடுநிலைப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மணப்பாறையில் பெய்த மழையால், திருச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அரியாறு தண்ணீர், திருச்சி இனியானூர் கோரையாற்றில் கலக்கும்.

அரியாற்று தண்ணீரால், கோரையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் புங்கனூர், தீரன்நகர் இடையே ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இனியானூர், பிராட்டியூர் மேற்கு பகுதியில் உள்ள முருகன் நகர், குபேரன்நகர், வர்மா நகர் தெற்கு ஆகிய பகுதிகளில் சுமார் 800 வீடுகளை 2வது நாளாக இன்றும் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் தவிக்கின்றனர். மேலும் பிராட்டியூர் முதல் தீரன்நகர் வரை திருச்சி-திண்டுக்கல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால் சாலையில் ஒரு வழியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மற்றொரு சாலையில் அனைத்து வாகனங்களும் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

Related Stories:

More