ஐஐடி மாணவி பாத்திமா மர்ம மரண வழக்கு!: சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தந்தை அப்துல்..!!

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரண வழக்கில் அவரது தந்தை அப்துல் லத்தீப்பிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி அவர் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வழக்கை முதலில் விசாரித்த கோட்டூர்புரம் போலீசார், மாணவி மரணத்திற்கு மதிப்பெண் குறைவாக பெற்றதே காரணம் என தெரிவித்திருந்தனர்.

ஆனால் இறுதிச்சடங்கிற்கு பின் அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் தனது மரணத்திற்கு ஐஐடி பேராசிரியர் சுதர்சன், பத்மநாபன் உள்ளிட்ட 3 பேராசிரியர்கள் தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றது. பாத்திமா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டது.

இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாக வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. விசாரணைக்காக மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் சென்னை பெசன்ட்நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: